Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள ‘உழவர் அலுவலர் தொடர்பு 2.0’ திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முந்தைய திமுக ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக புதிய அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணிகள் மற்றும் நோக்கங்கள் வேறுபட்டவை என்றும், அவற்றை ஒருங்கிணைத்து அனைத்து துறை பணிகளையும் ஒரே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் ‘உழவர் அலுவலர் தொடர்பு 2.0’ திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அதிகாரிகள் வாரத்திற்கு நான்கு நாட்கள் கிராமங்களுக்கு சென்று களப்பணிகளை மேற்கொள்வதுடன், அலுவலக நிர்வாகப் பணிகளையும் செய்ய வேண்டும் என 56 வகையான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது அதிகாரிகளுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் தங்களது துறைக்கு வெளியான பயிர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டிய நிலை உருவாகும் என்றும், இதனால் விவசாயிகளுக்கு தவறான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கும் என்று அரசு விளக்கமளித்தாலும், அது நடைமுறையில் வேளாண் வளர்ச்சியையே பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகக் கூறிய அன்புமணி, அப்போது எதிர்ப்புகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை தற்போதைய அரசு மீண்டும் செயல்படுத்தக் கூடாது என்றும், உழவர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ‘உழவர் அலுவலர் தொடர்பு 2.0’ திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P