Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூன் (ஹி.ச.)
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற யோசனையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்பட்டிருப்பது உழவர் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டும் முயற்சியை எந்த விலையும் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு என்றும், அந்த அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்ததாகவும், அதனை அரசு ஏற்றுக்கொண்டு தீர்மானத்தில் இணைத்ததாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆனால், மேகதாது அணை சிக்கலுக்கு புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்றும், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி தமிழகத்தின் அனுமதி இன்றி மேல்மடை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளா புதிய நீர்த்தேக்கத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய நடுவர் மன்றம் அமைப்பது தேவையற்ற சட்டச் சிக்கல்களை உருவாக்குவதுடன், கர்நாடகத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தம் மூலமாகவே பாதுகாக்க முடியும் என்றும், அதற்கான அரசின் அனைத்து நியாயமான முயற்சிகளுக்கும் பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள தனி நடுவர் மன்றம் தொடர்பான பகுதியை பேரவை விதிகளின்படி நீக்கிவிட்டு, அதன் பிறகே மத்திய அரசுக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P