குடும்பங்களின் செலவு அழுத்தத்தை குறைக்க எரிபொருள் வரி நிவாரணம் நீட்டிப்பு - ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு
ஆஸ்திரேலியா, 21 ஜூன் (ஹி.ச) ஈரான் போர் காரணமாக அதிகரித்துவரும் எரிபொருள் செலவுகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், எரிபொருள் மீதான வரி நிவாரணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி இன்று தெ
Australia extends fuel tax relief to ease cost-of-living pressures on families.


ஆஸ்திரேலியா, 21 ஜூன் (ஹி.ச)

ஈரான் போர் காரணமாக அதிகரித்துவரும் எரிபொருள் செலவுகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையில், எரிபொருள் மீதான வரி நிவாரணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி இன்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

ஜூலை மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வழக்கமான விலையைவிட லிட்டருக்கு 16 சென்ட் குறைவாக்கி, எரிபொருள் வரி நிவாரணத்தை மேலும் ஒரு மாதத்திற்கு அரசு நீட்டிக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் ஒரு டேங்குக்கு சுமார் 11 ஆஸ்திரேலிய டாலர்களை மிச்சப்படுத்தலாம்.

பெட்ரோல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைத்து, வாழ்க்கைச் செலவுடன் போராடும் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் தற்காலிக ஆதரவு இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரால் எரிபொருள் விலை உயர்ந்ததை அடுத்து, குடும்பங்களுக்கு உதவும் வகையில் மத்திய-இடதுசாரி அரசு ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வை வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலை பயன்பாட்டுக் கட்டணத்தையும் ஜூன் இறுதி வரை மூன்று மாதங்களுக்கு நீக்கியிருந்தது.

இன்று வெளியான இந்த அறிவிப்பு, உள்நாட்டு கையிருப்பில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வெளியிடும் நடவடிக்கையை செப்டம்பர் வரை நீட்டிக்கும் கடந்த மாத முடிவைத் தொடர்ந்து வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலையில் முடிவடைய இருந்தது.

தனது எரிபொருளில் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் ஆஸ்திரேலியா, பிப்ரவரியில் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான போரின்போது உள்ளூர் அளவில் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

போர் தொடங்குவதற்கு முன், உலகின் 20% எண்ணெய் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்பட்டது. போர் காரணமாக அந்த விநியோகம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b