சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி மஞ்சன விழா - இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் அமல்
சிதம்பரம், 21 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனி மஞ்சன விழா நடைபெற்று வருகின்றது. இதில் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாளை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் எழுந
Chidambaram Natarajar Temple Aani Manjanai festival


சிதம்பரம், 21 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனி மஞ்சன விழா நடைபெற்று வருகின்றது.

இதில் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாளை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மன் எழுந்தருளி மகா அபிஷேகம் நடைபெறும்.

இதனை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட காவல்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விழா நாட்களில் கடலூர் மற்றும் புவனகிரி மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், அண்ணாகுளம் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்தே பயணிகளை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சீர்காழி மற்றும் காட்டுமன்னார்கோவில் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் நகருக்குள் நுழையாமல், அம்மாபேட்டை வழியாக கடவாச்சேரி புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும்.

இதன் மூலம் முக்கிய வீதிகளில் வாகன நெருக்கடி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலைநகர் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் காந்தி சிலை வழியாக மட்டுமே பேருந்து நிலையத்தை சென்றடைய அனுமதிக்கப்படும். பிற வழித்தடங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடலூர் மற்றும் புவனகிரி மார்க்கமாக சிதம்பரம் வரும் கார்கள், வேன்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அனைத்தும் பள்ளிப்படை பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கிருந்து கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லவோ அல்லது உள்ளூர் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவோ கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனி மஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் மற்றும் தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையின் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b