குற்றால அருவிகளில் நீர்வரத்து சரிவு - விடுமுறையில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தென்காசி, 21 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் போதிய மழையின்மை காரணமாக அருவிகளின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பத்துடன் கு
குற்றால அருவிகளில் நீர்வரத்து சரிவு - விடுமுறையில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்


தென்காசி, 21 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் போதிய மழையின்மை காரணமாக அருவிகளின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பத்துடன் குற்றாலத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீரின் வேகம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

வழக்கமாக ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் தற்போது மெல்லிய சாரல் போலவே விழுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் குற்றாலம் வந்திருந்தனர்.

ஆனால் அருவிகளில் குளிப்பதற்குப் போதிய தண்ணீர் இல்லாததால், பலரும் குளிக்காமலேயே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருவிக் குளியலை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், நீர்வரத்து குறைவு அவர்களைச் சோர்வடையச் செய்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் போதிய மழை பெய்தால் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அடுத்த சில நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் நிலைமை சீரடையும் என்று தெரிவித்தனர்.

நீர்வரத்து குறைவால் குற்றாலம் பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீசன் காலத்தை நம்பியிருக்கும் உள்ளூர் வியாபாரிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b