Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 21 ஜூன் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பஞ்சப்பூரில் இருந்து கடலூருக்கு நேரடி பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பஞ்சப்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பெரம்பலூர், தொழுதூர், விருத்தாசலம் ஆகிய ஊர்களை கடந்து கடலூர் சென்றடையும்.
இதுவரை கடலூர் செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி அல்லது வேறு இடங்களில் பேருந்து மாறி செல்ல வேண்டிய நிலை இருந்தது. நேரடி சேவை தொடங்கியுள்ளதால் பயண நேரமும், செலவும் கணிசமாக குறையும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பஞ்சப்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் இந்த புதிய சேவையால் பெரிதும் பயனடைவர்.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
பேருந்துகளின் நேர அட்டவணை மற்றும் கட்டண விவரங்களை பஞ்சப்பூர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் அறிந்துகொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் பயன்பாட்டைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b