Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த உள்கட்சி ஆய்வு மற்றும் கலாய்வு குழு தனது முழுமையான அறிக்கையை கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் அமைப்பு கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணிகளை திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் முடிவுகள், மாவட்ட அளவிலான கட்சி செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, இளைஞர் மற்றும் பெண்கள் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தற்போது அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 78 மாவட்டங்களின் எண்ணிக்கையை சுமார் 120 மாவட்டங்களாக உயர்த்தும் திட்டம் குறித்து தலைமைக் கழகத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டங்களை சிறு நிர்வாக அலகுகளாகப் பிரிப்பதன் மூலம் கட்சியின் அடித்தள கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நிர்வாக செயல்திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர் அணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்கும் வகையில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த மறுசீரமைப்பு பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டும் இந்த அமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட வாரியான ஆலோசனைகள் நிறைவடைந்த பின்னர் புதிய நிர்வாக கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P