Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
சென்னை நந்தனம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நந்தனம் சிக்னல் அருகே அண்ணா சாலையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட மேம்பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய காரை இப்ராஹிம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதி வழியாக கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இருப்பினும், காரை ஓட்டிச் சென்ற இப்ராஹிம் சிறு காயங்கள் கூட இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b