எட்டயபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து - உரிமையாளர் உட்பட 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
எட்டயபுரம், 21 ஜூன் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்ராஜாபட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 29 தொழிலாளர்கள் படு
Ettayapuram firecracker factory explosion


எட்டயபுரம், 21 ஜூன் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்ராஜாபட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 29 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மாரியம்மாள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த 29 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது, அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வெடி விபத்தின் தீவிரத்தால் ஆலையின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b