Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 21 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக மீன்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மீன் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூபாய் 1,300 வரை விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் மீன், இன்று ரூபாய் 900 ஆக குறைந்து விற்கப்படுகிறது. அதேபோல், ரூபாய் 250க்கு விற்ற நெத்திலி மீன் தற்போது ரூபாய் 150க்கும், ரூபாய் 500க்கு விற்பனையான சங்கரா மீன் ரூபாய் 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கடந்த வாரம் ரூபாய் 650 வரை விலை போன கொடுவா மீன் தற்போது ரூபாய் 400க்கு கிடைக்கிறது. நண்டு வகைகளும் ஒரு கிலோ ரூபாய் 400 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
மீன்களின் விலை கிட்டத்தட்ட 30 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதால், காலை முதலே துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் ஆழ்கடலுக்கு சென்ற படகுகள் அதிக அளவில் மீன்களுடன் கரை திரும்பியுள்ளன. குறிப்பாக வஞ்சிரம், சங்கரா, கொடுவா போன்ற உயர் ரக மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகமானதால் விலை தானாகவே குறைந்துவிட்டது
என்றனர்.
விலை குறைவு காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் வீடுகளில் மீன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த விலை குறைவு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், விலை சரிவு மீனவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தினாலும், அதிக விற்பனை மூலம் அது ஈடுகட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b