அரசுப் பள்ளியில் விஜய் புகைப்படம் வைத்து ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் - தவெக நிர்வாகி நீக்கம்
காஞ்சிபுரம், 21 ஜூன் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் கட்சித் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ்
பள்ளிக்கல்வித்துறை


காஞ்சிபுரம், 21 ஜூன் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் கட்சித் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ், சிலருடன் அரசு பள்ளிக்குள் சென்று வகுப்பறையில் கட்சித் தலைவர் ஜோசப் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டி, அதனை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வடிவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி ராஜேஷை அவர் வகித்து வந்த மேற்கு ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து மட்டுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி தவெக தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், அரசு பள்ளி வளாகத்தில் இந்த சம்பவம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பள்ளியின் பொறுப்பாசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரின் பதிலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசுப் பள்ளி வளாகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக எழுந்துள்ள இந்த விவகாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam