Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஜூன் (ஹி.ச.)
கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, மாநகர காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு சரக துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், 3 உதவி ஆணையர்கள், 10 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 165 போலீசார் பங்கேற்றனர். சிறையின் பல்வேறு பிரிவுகள், கைதிகள் தங்கும் அறைகள் மற்றும் வளாகத்தின் முக்கிய பகுதிகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் போது, கைதிகளின் உடைமைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. எனினும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்போன்கள் அல்லது வேறு எந்த சட்டவிரோத பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam