Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்துக்கு, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடுமையாக பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கும் விவகாரத்தில் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு மேகதாது திட்டத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கருதினால், அதே தீர்மானத்திற்கு ஆதரவளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினரையும் கட்சியில் இருந்து நீக்குமாறு அவர் கோருவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கர்நாடக முதலமைச்சரின் பதவியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கூறுவது விசித்திரமான கோரிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை கர்நாடக முதலமைச்சருக்கு வழங்கவில்லை என்றும், ஒரு மாநில பாஜக மற்றொரு மாநில பாஜக பிரிவுக்கு உத்தரவிடலாம்; ஆனால் காங்கிரஸ் அப்படி செயல்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலம், நீர், மொழி போன்ற விவகாரங்களில் கர்நாடகம் எப்படி ஒன்றுபட்டு பேசுகிறதோ, அதேபோல் காவிரி நீர் உரிமையை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடும் ஒரே குரலில் நிற்பதாகவும், இதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை; மக்களின் உரிமையே முதன்மை என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு தமிழ்நாட்டின் நலனுக்காகவே தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவில் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு காங்கிரஸின் ஆதரவு தொடரும் என்றும், எதிர்காலத்திலும் காங்கிரஸ்–தவெக கூட்டணி நீடிக்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P