மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் அவசியம் – வேலூரில் திருமாவளவன் வலியுறுத்தல்
வேலூர், 21 ஜூன் (ஹி.ச.) மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார். வேலூரில் நடைபெற்ற திருமண
திருமாவளவன்


வேலூர், 21 ஜூன் (ஹி.ச.)

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.

வேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்,

செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

மேகதாது அணை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என்ற அவர், அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவது அவசியம் என்றார்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் என்பதால், அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற திட்டங்கள் அரசின் அக்கறையை வெளிப்படுத்தினாலும், வல்லுநர்களுடன் ஆலோசித்து மேலும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரேஷன் அரிசி தரம் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த அவர், பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்றும், அரசு அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்த யார் நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதை தேர்தல் உணர்த்தியுள்ளது என்ற கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, ஒவ்வொரு தேர்தலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அது ஒரு வழக்கமான அரசியல் கருத்துதான் என்று பதிலளித்தார்.

அரசுப் பள்ளியில் விஜய் புகைப்படம் வைத்து ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதுபற்றி தமிழக வெற்றிக் கழகத்தினரிடமே கேளுங்கள் என்று சுருக்கமாக பதிலளித்தார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும், ஆகஸ்ட் 17-ஆம் தேதி தமிழர் எழுச்சி மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் தலைமையில் விரைவில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் எதிர்கால அரசியல் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam