நீட் மறுதேர்வு இன்று பிற்பகல் தொடக்கம் - தென் மாவட்டங்களில் 13,480 மாணவர்கள் எழுதுகின்றனர்
திருநெல்வேலி, 21 ஜூன் (ஹி.ச) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நீட் மறுதேர்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வினாத்தாள்கள் மற்றும் தேர்வு பொருட்களை த
நீட் மறுதேர்வு இன்று பிற்பகல் தொடக்கம் - தென் மாவட்டங்களில் 13,480 மாணவர்கள் எழுதுகின்றனர்


திருநெல்வேலி, 21 ஜூன் (ஹி.ச)

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நீட் மறுதேர்வு இன்று பிற்பகல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வினாத்தாள்கள் மற்றும் தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 26 மையங்களில் இந்த நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது. இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 13,480 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற நீட் தேர்வில் தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்த மறுதேர்வு நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் பறக்கும் படைகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உலோக பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் உரிய நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருட்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறும் என்பதால், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்து சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b