தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு -பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, 21 ஜூன் (ஹி.ச.) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு
சென்னை வானிலை மையம்


சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் AWS பகுதியில் 54.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நத்தம், கருமந்துறை, நாகப்பட்டினம், பாம்பார் அணை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது.

இன்று (ஜூன் 21) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 22)

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 23 முதல் 27 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.

குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை சமவெளிப் பகுதிகளில் நாமக்கல்லில் 24 டிகிரி செல்சியஸாகவும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 10.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

சென்னைக்கு மழை வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள கடலோரம், லட்சத்தீவு மற்றும் வங்கக்கடலின் சில பகுதிகளில் ஜூன் 21 முதல் 25 வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

இதனால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam