கொடுங்கையூர் குப்பைமேட்டில் திடீர் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதி
சென்னை, 21 ஜூன் (ஹி.ச.) சென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள மாநகராட்சியின் பிரம்மாண்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கின் பல்வேறு பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் தீயால் அடர்ந்த கரும்புகை வானளாவ எழுந்து, சுற்றுவட்டாரப் பகுத
Sudden fire at Kodungaiyur dumpyard


சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)

சென்னை கொடுங்கையூரில் அமைந்துள்ள மாநகராட்சியின் பிரம்மாண்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கிடங்கின் பல்வேறு பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் தீயால் அடர்ந்த கரும்புகை வானளாவ எழுந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளை சூழ்ந்துள்ளது.

இதனால் கொடுங்கையூர், எழில் நகர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் மூச்சுத் திணறலுக்கும், கண் எரிச்சலுக்கும் ஆளாகி அவதிப்படுகின்றனர்.

சுமார் 333 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பைமேட்டில் தினமும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6,000 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

கோடை காலங்களில் அதிக வெப்பம் காரணமாகவும், சில சமயங்களில் குப்பை பொறுக்க வருபவர்கள் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களை எடுப்பதற்காக தீ வைப்பதாலும் இங்கு அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், குப்பைக் குவியலுக்கு அடியில் தொடர்ந்து கனன்று கொண்டிருக்கும் தீயால் நச்சுத்தன்மை கலந்த புகை இடைவிடாமல் வெளியேறி வருகிறது.

இந்த நச்சுப் புகையால் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குப்பைமேட்டில் இருந்து எழும் புகை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் புகை புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

சமீபத்தில் இதேபோல் பெருங்குடி குப்பை கிடங்கிலும் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 100 வாகனங்கள் எரிந்து நாசமானதும், துரைப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் புகை சூழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொடுங்கையூர் குப்பைமேட்டில் பயோ-மைனிங் முறையில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தாலும், தீ விபத்துகளை தடுக்கவும், அவசரகால நிலையை சமாளிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b