Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை முதல் மீன் பிரியர்கள் பெருமளவில் குவிந்தனர்.
வார இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வத்துடன் திரண்டதால், துறைமுக வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை முதலே வியாபாரம் சூடுபிடித்த நிலையில், வாகன நெரிசலும் அதிகமாக காணப்பட்டது.
இன்றைய சந்தை நிலவரப்படி, முதல்தர மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 1500 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல, பாறை மீன் கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா மீன் 700 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கடல் உணவுப் பிரியர்கள் விரும்பும் நண்டு ஒரு கிலோ 500 ரூபாயாகவும், இறால் 550 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் கரை திரும்பியதால் மீன் வரத்து அதிகரித்திருந்த போதிலும், விலையில் எதிர்பார்த்த சரிவு ஏற்படவில்லை என வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
விடுமுறை நாள் தேவையும், ஏற்றுமதிக்கான கொள்முதலும் அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விலை அதிகமாக இருந்தாலும், தரமான மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியதால் வியாபாரம் களைகட்டியது.
Hindusthan Samachar / vidya.b