கோவை மத்திய சிறையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை
கோவை, 21 ஜூன் (ஹி.ச.) கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சிறைக் காவலர்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த சோதனையில், கைதிகளிடம் தடை செய்யப்பட்ட போதைப்
Surprise raid by over a hundred police personnel at Coimbatore Central Prison.


கோவை, 21 ஜூன் (ஹி.ச.)

கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சிறைக் காவலர்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த சோதனையில், கைதிகளிடம் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், செல்போன்கள் மற்றும் அனுமதிக்கப்படாத பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் பணிகள் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கோவை மத்திய சிறையில் முழுமையான சோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை தொடங்கியது.

மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் ஆயுதப்படை போலீசார், உள்ளூர் காவல் நிலையத்தினர் மற்றும் சிறைத்துறை காவலர்கள் அடங்கிய குழுவினர் சிறையின் அனைத்து வார்டுகள், சமையல் கூடம், நூலகம் மற்றும் கைதிகள் தங்கும் அறைகளை முழுமையாக சல்லடை போட்டு சோதித்து வருகின்றனர்.

சமீப காலமாக தமிழக சிறைகளில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

சிறைக்குள் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் பொருட்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும், சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கவும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b