Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
தமிழ் திரைப்பட உலகில் பல திறமையான இளம் கலைஞர்கள் உருவாகி வந்தாலும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை தங்களுக்கென ஒரு தனித்துவமான படைப்பாற்றல் அடையாளமாக மாற்றிக் கொள்வோர் மிகச் சிலரே. அந்த வகையில், தொழில்துறையின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான படைப்புகளில் பணியாற்றி மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ள இளம் தயாரிப்பாளர்களான ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா இணைந்து, வலுவான கதையம்சங்களும் நவீன சிந்தனைகளும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘டேக் எ ஷாட்’ (Take A Shot)-ஐ தொடங்கியுள்ளனர்.
வெறும் 29 வயதிலேயே திரைப்படத் தயாரிப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பயணத்தை மேற்கொண்டுள்ள ஆஷீஷா ஸ்ரீனிவாசன், சிஷ்யா பள்ளியின் முன்னாள் மாணவியும், யுனிவர்சிட்டி ஆஃப் நாட்டிங்காம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வணிகப் படிப்பில் பட்டம் பெற்றவரும் ஆவார்.
இந்திய சினிமாவில் தலைசிறந்த இயக்குநரான மணிரத்னத்திடம் ‘காற்று வெளியிடை’, ‘வானம் கொட்டட்டும்’, ‘பொன்னியின் செல்வன்’: பாகம் 1 மற்றும் பாகம் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் தயாரிப்பு பிரிவில் பணியாற்றியவர். பின்னர், ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையிலான லைகா புரொடக்சன்ஸ் தயாரித்த ‘வேட்டையன்’ மற்றும் ‘விடாமுயற்சி’ போன்ற பெரிய திரைப்படங்களிலும் பங்காற்றினார்.
‘டேக் எ ஷாட்’ நிறுவனத்தின் இணை நிறுவனரான ரியா கொங்கரா, ரிஷி வேலி பள்ளியின் முன்னாள் மாணவி. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரப் பட்டம் பெற்றவர்.
‘பொன்னியின் செல்வன்’: பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களின் தயாரிப்பு பிரிவில் பணியாற்றிய இவர், பின்னர் ‘சூரரைப் போற்று’, ‘இளமை இதோ இதோ’, ‘ரகு தாத்தா’ மற்றும் ‘பராசக்தி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் (Executive Producer) பணியாற்றினார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கமல்ஹாசன் மற்றும் க ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் KHxRK திரைப்படத்தின் விளம்பரப் பிரிவில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
திரைப்பட உலகை மிக நெருக்கமாகக் கவனித்து, துறையின் மிகுந்த மதிப்புக்குரிய பல ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைத் தங்களது புதிய முயற்சியான ‘டேக் எ ஷாட்’ நிறுவனத்தின் மூலம் ஆஷீஷா மற்றும் ரியா தற்போது புதிய திசையில் கவனம் செலுத்துகின்றனர்.
பல்வேறு தரப்பு மற்றும் தலைமுறை பார்வையாளர்களுடன் இணைவதற்கான திறன் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதோடு, அர்த்தமுள்ள கதைகள், புதிய பார்வைகள் மற்றும் தனித்துவமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.
அனுபவத்தின் அடித்தளத்திலும், திரைப்படத்தின் மீதான உண்மையான காதலாலும் உருவான ‘டேக் எ ஷாட்’, ஒரே படைப்பாற்றல் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு இளம் தொழில்முறை நிபுணர்களின் கனவுப் பயணமாக திகழ்கிறது.
புதிய தயாரிப்பு நிறுவனமாக வலுவாக உருவெடுத்து வரும் ‘டேக் எ ஷாட்’, தங்களது முதல் திரைப்பட முயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / Durai.J