விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம் – சுவாமி தரிசனத்திற்கு 3 மணி நேரம், நாழிக்கிணற்றில் நீராட 5 மணி நேரம் காத்திருப்பு
தூத்துக்குடி, 21 ஜூன் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இ
திருச்செந்தூர் கோவில்


தூத்துக்குடி, 21 ஜூன் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூ.100 சிறப்பு தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை ஆகிய இரண்டிலும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடுவதற்காக சுமார் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கோவிலில் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களும் கடும் சிரமத்தை சந்தித்தனர். முடி காணிக்கைக்கான டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து காணிக்கை செலுத்தும் நிலை உருவானது.

விடுமுறை நாளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதால், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam