Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 21 ஜூன் (ஹி.ச.)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கும்பக்கரை அருவியில், சுற்றுலாப் பயணிகள் இன்று (ஜூன் 21ஆம் தேதி) முதல் மீண்டும் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
இதனால் பாறைகள் வழுக்கும் அபாயம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் அருவியில் குளிப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீராக அதிகரித்து, அருவி தற்போது ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியுள்ளது.
நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் ஆய்வு செய்த பின்னர், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடையை இன்று முதல் நீக்கியுள்ளனர்.
இதனால் கோடை விடுமுறையொட்டி கும்பக்கரை அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம், அருவியில் குளிக்கும் பொழுது பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அருவிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b