Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மற்றும் நாளை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.
இலவச நுழைவுக்காக ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்பதிவு இடங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக டிக்கெட் பெற முடியாத சூழல் ஏற்பட்டதால், ஏராளமானோர் பூங்கா நுழைவாயிலிலும் ஜிஎஸ்டி சாலையோரங்களிலும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வழக்கத்தை விட அதிகளவில் பார்வையாளர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்துடன் மக்கள் வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணைய வசதி பயன்படுத்தத் தெரியாதவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கட்டணமில்லை என்ற அறிவிப்பை நம்பி நேரடியாக வந்தோம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாது.
தற்போது வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதான நுழைவாயிலில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னரே பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதால், நுழைவாயில் பகுதியில் நீண்ட வரிசையும் காத்திருப்பும் தொடர்கிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam