Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர் , 22 ஜூன் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் நான்கு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 114 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை சுமார் 28,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் வெறும் 11,000 மெட்ரிக் டன் நெல் மட்டுமே அரசு கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் நகர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீதமுள்ள 17,000 மெட்ரிக் டன் நெல், அதாவது சுமார் நான்கு லட்சம் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன.
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தார்பாய்களால் மூடப்பட்டிருந்தாலும், தொடர் மழை பெய்தால் நெல் முழுவதும் வீணாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லை விற்பனை செய்த விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலும், கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக புதிய நெல் கொள்முதல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை விரைந்து நகர்த்தி, புதிய வரத்துக்கு இடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாரிகள் பற்றாக்குறை மற்றும் அரவை ஆலைகளில் உள்ள இடநெருக்கடி காரணமாக நெல் நகர்வு தாமதமாவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b