தர்மபுரிக்கு காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வர வேண்டும் – சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்
சென்னை , 22 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தர்மபுரி மாவட்ட வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் அடிப்படை
சௌமியா


சென்னை , 22 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தர்மபுரி மாவட்ட வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

உரையின் தொடக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தன்னை தேர்ந்தெடுத்த தர்மபுரி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சமூகநீதி கணக்கெடுப்பு அறிவிப்பை பாமக வரவேற்பதாக கூறிய அவர், இதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய நலத்திட்டங்கள் சென்றடையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

விவசாயிகளின் நிலை குறித்து பேசிய சௌமியா அன்புமணி, 2021 முதல் 2023 வரை தமிழகத்தில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 50 சதவீத கடன் தள்ளுபடி போதுமானதல்ல என்றும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது என்றும், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக இருப்பதாக கூறிய அவர், காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் மாவட்டத்தில் பாய்ந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார். எனவே, தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், வேலைவாய்ப்பின்மை காரணமாக சுமார் 3 லட்சம் இளைஞர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலைக்காக செல்வதாகக் குறிப்பிட்ட அவர், தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தி தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்றார். ஏற்கனவே இரண்டு முறை பூமிபூஜை நடைபெற்ற நிலையில் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனிமவள கொள்ளையை கட்டுப்படுத்தி வருவாயை முறைப்படுத்தினால் தமிழக அரசின் வருமானம் கணிசமாக உயரும் என்றும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

இதனையடுத்து, தர்மபுரி–மொரப்பூர் ரயில் பாதைத் திட்டம் குறித்து பேசிய அவர்,

84 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும் என்றார். அன்புமணி ராமதாஸ் மக்களவை உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசிடம் இருந்து திட்டத்திற்கான நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலம் கையகப்படுத்துவதே முக்கிய தேவையாக இருப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

தர்மபுரி–மொரப்பூர் ரயில் திட்டத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்த தனி தாசில்தாரை நியமித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று உறுதியளித்தார்.

அமைச்சரின் அறிவிப்புக்கு சௌமியா அன்புமணி நன்றி தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam