Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி , 22 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் குறிப்பாக அனவன் கோயில் மற்றும் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே இரவு நேரங்களில் கரடி ஒன்று சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் நேரில் கண்டதாக தெரிவிக்கின்றனர்.
கோயிலுக்கு அருகில் உள்ள தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் கரடியின் கால்தடங்கள் காணப்பட்டதாகவும், இரவில் உறுமும் சத்தம் கேட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதி மக்கள் இரவு நேரங்களிலும் அதிகாலை வேளையிலும் தனியாக வெளியே செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவும் பகல் நேரத்தில் மட்டும் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி கரடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரடியை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் கரடியை சீண்டவோ, தாக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும், கரடி நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b