Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 22 ஜூன் (ஹி.ச)
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 1203 கன அடி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆனால், திறக்கப்பட்ட நீரில் அடர்த்தியான வெண்ணிற ரசாயன நுரை பெருமளவில் பொங்கி வருவது அப்பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தொழிற்சாலை கழிவுகள் கலந்து வருவதால் இந்த நுரை ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நுரையுடன் கலந்து வரும் இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், கால்நடைகள் இந்த நீரை குடிப்பதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
தென்பெண்ணை ஆற்றை நம்பி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், ரசாயன கலப்புடன் நீர் வருவது தொடர்கதையாக இருப்பதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், கர்நாடகாவில் இருந்து வரும் தொழிற்சாலை கழிவுகளை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b