எண்ணூர் மேம்பாலத்தில் பயங்கர விபத்து- பொறியியல் கல்லூரி மாணவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம்
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) சென்னை எண்ணூர் அருகே உள்ள கத்திவாக்கம் மேம்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர
விபத்து


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

சென்னை எண்ணூர் அருகே உள்ள கத்திவாக்கம் மேம்பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மேகசுந்தரம் மற்றும் கொரட்டூரைச் சேர்ந்த ஸ்ரீஹரன் ஆகியோர் சென்னையில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். பகுதி நேர வேலைக்காக எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

தொழிற்சாலைக்குள் நுழைய ஷூ அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால், கத்திவாக்கம் சந்தை பகுதிக்கு சென்று ஷூ வாங்கிய பின்னர் மீண்டும் தொழிற்சாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கத்திவாக்கம் மேம்பாலத்தின் வளைவு பகுதியில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் மோதியது.

இதில் இருவரும் சுமார் 60 அடி உயரமுள்ள மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள், படுகாயமடைந்த ஸ்ரீஹரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேகசுந்தரம் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P