ஜூலையில் சென்னை வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை - பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முக்கிய வழித்தடமாக கருதப்படும் வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடம் சென்னையின் மேற்குப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய ப
ஜூலையில் சென்னை வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை - பிரதமர் மோடி தலைமையில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முக்கிய வழித்தடமாக கருதப்படும் வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வழித்தடம் சென்னையின் மேற்குப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய போக்குவரத்து வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இறுதிக்கட்ட சோதனை ஓட்டங்கள் முடிந்து பயணிகள் சேவைக்கு தயாராகி வருகிறது.

பூந்தமல்லி, கரையான் சாவடி, குமணன் சாவடி, போரூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பூந்தமல்லி, போரூர், வடபழனி பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த வழித்தடத்தின் டபுள் டெக்கர் மெட்ரோ பகுதியில் வளசரவாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட சில இடங்களில் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. அப்பணிகள் முடிந்த பின்னரே முழு வழித்தடமும் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் மற்றொரு முக்கிய வழித்தடமான மாதவரம் - சோழிங்கநல்லூர் பாதை, போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் வழியாக இந்த வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இதனால் வடசென்னை முதல் தென்சென்னை வரை மெட்ரோ இணைப்பு மேலும் வலுவடையும். இந்த புதிய வழித்தடம் திறக்கப்பட்டதும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b