Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஜூன் (ஹி.ச)
சென்னை பெருநகரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு வாரத்தில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க 12 காவல் மாவட்டங்களிலும் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் தனிப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை காவல்துறையின் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (ANIU) குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு முக்கிய தகவல்களை சேகரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 14 முதல் 20 ஆம் தேதி வரை சென்னை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை மற்றும் வாகனத் தணிக்கைகளில், சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வந்தவர்கள், பதுக்கி வைத்தவர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தொடர்புடைய 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 831 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 மில்லிகிராம் ஓப்பியம், 2 மில்லிகிராம் கொக்கைன் மற்றும் 1,222 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, ஒரு கார் மற்றும் 5 செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் போதைப்பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ