அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேல் நடவடிக்கையை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, 22 ஜூன் (ஹி.ச) அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு கண்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு
Cpi


சென்னை, 22 ஜூன் (ஹி.ச)

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு கண்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் உருவாகி, அதன் தொடர்ச்சியாக ஸ்விட்சர்லாந்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாள் சாலைவரைபடம் (roadmap) குறித்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்காசியாவில் அமைதி திரும்பும் சூழல் உருவாகியுள்ள நிலையில், ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் அமைதி முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்ரேல் செயல்படுவது மேற்காசிய பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்காசிய நாடுகளில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் வாழ்வாதாரம் அப்பகுதியின் அமைதியுடன் தொடர்புடையது என்பதால், அங்கு போர்ப் பதற்றம் நீடிப்பது அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைதி முயற்சிகளுக்கு எதிராக செயல்படும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஒன்றிய பாஜக தலைமையிலான மத்திய அரசு வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ