Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா விஷவாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை உயர்த்துவதோடு, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் தங்க வைத்ததே இந்த பெரும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் என்றும், 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் வயது 16 முதல் 25 வரை இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.
தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா என்ற கேள்வியை எழுப்பிய அவர், கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் ஆறு மாதங்களாக பாதுகாப்பு ஆய்வு நடைபெறாதது கவலைக்குரியது என்றார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவைகள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என்றும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக இருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து கூடுதல் இழப்பீட்டை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் அடிப்படை பொறுப்பு என குறிப்பிட்ட அவர், தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.
அதேபோல், 2020-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்பை பலவீனப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தொழிலாளர் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தினார்.
இந்த விபத்துக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வழக்கை விரைவாகவும் வெளிப்படையாகவும் விசாரித்து, பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ