பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தேனியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
தேனி, 22 ஜூன் (ஹி.ச) தேனி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது மற்று
பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தேனியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்


தேனி, 22 ஜூன் (ஹி.ச)

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், வட்டி சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாய சங்கங்களின் தலைமையில் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

இது குறித்து,போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில்,

பயிர் கடன் தள்ளுபடி என்பது எங்களுக்கு சலுகை அல்ல, வாழ்வாதார பிரச்சினை. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் அறிவிக்க வேண்டும்.

என கூறினர்.

போராட்டக் களத்தில் பெண் விவசாயிகளும் திரளாக பங்கேற்று, கடன் நெருக்கடியால் குடும்பங்கள் சந்திக்கும் இன்னல்களை எடுத்துரைத்தனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b