ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடித் தடை
ராமேஸ்வரம், 22 ஜூன் (ஹி.ச.) கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மீன்பிடித் தொழிலுக்கு மீன்வளத்துறை சார்பில் தற்காலிக தடை
Fishing ban for Rameswaram and Pudukkottai fishermen begins today.


ராமேஸ்வரம், 22 ஜூன் (ஹி.ச.)

கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மீன்பிடித் தொழிலுக்கு மீன்வளத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கத்தால், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

இந்த உத்தரவின்படி, ராமேஸ்வரத்தில் இன்று முதல் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திடீர் தடையால் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடல் சீற்றம் குறையும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீறி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மறு உத்தரவு வெளியான பின்னரே மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை சீரான பின்னரே மீன்பிடி தடை விலக்கப்படும் என்பதால், மீனவர்கள் அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b