Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 22 ஜூன் (ஹி.ச)
விவசாய உழவு கருவிகளுக்குத் தேவையான பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு உழவு கருவிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் முக்கிய எரிபொருளாக உள்ளது.
இதில் சில கருவிகளை நேரடியாக பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால், விவசாயிகள் கேன்களில் எரிபொருளை வாங்கிச் சென்று பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக பெட்ரோல் நிலையங்களில் கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விவசாய உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் பெரிய அளவிலான எரிபொருள் கேன்களையும் சிறிய ரக உழவு கருவிகளையும் எடுத்துக்கொண்டு வந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, விவசாய உழவு கருவிகளுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை கேன்களில் வழங்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் அல்லது மாற்று விநியோக முறையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிச்சாமி,
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விவசாயப் பயன்பாட்டு கருவிகளுக்கு கேன்களில் எரிபொருள் வழங்கப்படாது என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அந்த கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்” என்றார்.
மேலும், கேன்களில் எரிபொருள் வழங்கும் பெட்ரோல் நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுவதாக தகவல் கிடைக்கிறது.
இந்த நடைமுறையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாய அட்டை வைத்துள்ளவர்களுக்கு கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்க விலக்கு அளித்தால்தான் விவசாயப் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசு பரிசீலித்து, இதுகுறித்து மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ