Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 22 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில், மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கமான வாகன சோதனையின் போது, தமிழகத்திற்கு வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதி கேசவன் (23) என்பவரிடம் இருந்து 10 கிராம் மெத்தபெத்தமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், மற்றொரு தனியார் பேருந்தில் சோதனை மேற்கொண்டபோது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் (43) என்பவர் 1.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரையும் போலீசார் கைது செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழக எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN