Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 ஜூன் (ஹி.ச)
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தேர்தலின்போது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மற்றும் பணியாளர் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கானோர் பணிநியமனத்திற்காக காத்திருக்கும் நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாத நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது கவலைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க தேவையான ஆசிரியர்களை நியமிப்பது அரசின் முதன்மை கடமையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமிழக பல்கலைக்கழகங்களில் 67 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறிய ஹெச். ராஜா, உயர்கல்வித் துறையும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பி, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ