Enter your Email Address to subscribe to our newsletters

தம்புல்லா , 22 ஜூன் (ஹி.ச.)
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை-ஏ அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா-ஏ அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
தம்புல்லாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா-ஏ அணிக்கு தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய வைபவ் சூர்யவன்சி, வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பிரியான்ஷ் ஆர்யா 39 ரன்கள் எடுத்தார்.
அதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் (40), திலக் வர்மா (67) ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து குமார் குஷாக்ரா 36 ரன்கள் சேர்த்தார்.
இறுதிக்கட்டத்தில் நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம் மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக அனுகுல் ராய் 15 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா-ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது.
378 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை-ஏ அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சமவிக்ரமா மற்றும் வானுஜ சஹான் ஆகியோர் அரைசதம் அடித்து போராடினாலும், மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கத் தவறினர்.
இறுதியில் இலங்கை-ஏ அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன்மூலம் இந்தியா-ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முத்தரப்பு ஒருநாள் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA