மேகதாது தீர்மான திருத்தம் டெல்டா மக்களின் நலனுக்காகவே - தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக முன்வைத்த திருத்தங்கள் டெல்டா மக்களின் நலனைக் கருத்த
தங்கம் தென்னரசு


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திமுக முன்வைத்த திருத்தங்கள் டெல்டா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சேர்க்கப்பட்டவை என விளக்கம் அளித்தார்.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளித்த நிலையில், தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை தங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, அதிமுக தனது கருத்துகளை முன்வைத்த பிறகு திமுக சில திருத்தங்களை கொண்டு வந்ததாகவும், அதன் பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

மத்திய நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளுடன் மட்டுமே உத்தரவு வழங்கியிருப்பதையும், இதனை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். மேகதாது அணைக்கு எதிராக பலமுறை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் தமிழகத்தின் எதிர்ப்பு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய அவசியம் இருப்பதாக கூறிய அவர், மேகதாது பிரச்சினை உச்சநீதிமன்றத்தில்கூட எளிதில் தீர்க்க முடியாத சிக்கலான விவகாரம் என்றார்.

மூத்த வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடுகளைத் தாண்டி டெல்டா மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாகவும், அதை முதலமைச்சர் தீர்மானத்தில் இணைத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது சட்டப்பேரவையில் எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், டெல்டா மக்களின் நலன் மற்றும் தமிழகத்தின் நீர்வள உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P