Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த போது காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் இளம்பெண் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் கோரப்பட்டது.
விசாரணையின் போது, போக்சோ நீதிமன்றங்களின் செயல்பாடு, நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் தேவை தொடர்பாக தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு மிகுந்த தீவிரத்துடன் அணுகி வருவதாக தெரிவித்தார்.
மேலும், போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை, அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கூடுதலாக எத்தனை நீதிமன்றங்கள் தேவைப்படும் என்பது குறித்து தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam