Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 22 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யும் நடைமுறைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் தினமும் சதுரகிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இன்று
(ஜூன் 22) முதல் தினசரி தரிசன நடைமுறை நிறுத்தப்பட்டு, பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி மலையேறி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகளை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சதுரகிரி தரிசனத்திற்காக தினந்தோறும் வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தாலும், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி விசேஷ நாட்களில் மட்டுமே தரிசனத்திற்கு வருமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam