Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச)
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவி வழங்கவும் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு
(Singappen Special Force - SSF) 1091 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி எண், 112 அவசரகால உதவி சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், அவசர அழைப்புகளுக்கு விரைவான பதிலும், சம்பவ இடங்களுக்கு உடனடி காவல் உதவியும் உறுதி செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில், 1091 என்ற ஒரே எண்ணின் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நேரடியாக தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் பிரத்யேக அழைப்பு ஏற்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையம் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு, பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது. பெறப்படும் புகார்கள் மற்றும் அவசர தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கும், அருகிலுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அல்லது ரோந்து குழுக்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு, தேவையான உதவி மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
தொந்தரவு, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் (Stalking), மிரட்டல் உள்ளிட்ட எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தயக்கமின்றி 1091 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் அதன் 1091 பிரத்யேக உதவி எண் மூலம் தமிழ்நாடு காவல்துறை முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ