Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)
தமிழக சட்டசபை 3வது நாளாக இன்று காலை கூடியது.
இன்று தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் ஆகும்.
அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், சட்டசபை கூடியதும் சபாநாயகர் முதலில் முதலமைச்சர் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவையிலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் மேஜையைத் தட்டி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கடுத்தபடி வாழ்த்துரைகள் முடிந்தவுடன், அவையின் வழக்கமான நடவடிக்கைகள் தொடங்கின.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு குறித்து விவாதிக்க அரசு தரப்பு தயாரானது.
இந்த விபத்தில் வடமாநில பெண் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 64-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மிக முக்கியமான மற்றும் அவசரமான பொதுப் பிரச்சினை குறித்து, சட்டசபை விதி 101-ன் கீழ் மாண்புமிகு அமைச்சர் பர்வேஸ் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
அப்போது அமைச்சர் பர்வேஸ் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சித் தலைவரான அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றனர்.
அமைச்சர் பேசுவதற்கு முன்பாக, இந்த விபத்து குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாங்கள் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பேச வேண்டும்.
மக்கள் உயிருடன் விளையாடிய இந்த சட்டவிரோத தொழிற்சாலை மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நாங்கள் முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், திமுக உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் அரசை முற்றுகையிட முயன்று குரல் எழுப்பினர்.
இதனால் அவையில் ஒரே நேரத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சத்தம் கேட்டு கூச்சல் குழப்பம் நிலவியது.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அரசு தரப்பில் விதி 101-ன் கீழ் அமைச்சர் விரிவான விளக்கத்தை அளிக்க உள்ளார்.
அவர் பேசி முடித்த பிறகு, விவாதத்தின் போது உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய தாராளமாக நேரம் ஒதுக்கப்படும்.
எனவே, அமைச்சர் பேசும் போது குறுக்கிட வேண்டாம் என்று கூறி இபிஎஸ்-க்கு பேச அனுமதி மறுத்தார்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தனது கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி சத்தமிட்டதால், சபாநாயகரின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவரின் மைக் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
தனது மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டு ஆவேசமடைந்த எடப்பாடி பழனிசாமி,எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கப் பார்க்கிறீர்களா? இத்தனை உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களை பேச அனுமதிக்காதது ஏன்? என்று கைகளை அசைத்து மிக ஆக்ரோஷமாக சத்தமிட்டார்.
பேச சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வெளிநடப்பு செய்யாமல் இருந்தனர்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
மேகதாது அணை தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் கூறிய திருத்தத்தை முதலமைச்சர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயலாகும்.
விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்?
அரசின் தனித்தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப கடிதம் கொடுத்திருந்தோம்.
உரிமை மீறல் பிரச்சினையை அதிமுக சார்பில் அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். ஆனால் உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
சட்டசபையில் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
அதனால் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b