தெருநாய்கள் பிரச்சினை - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 22 ஜூன் (ஹி.ச) பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங
தெருநாய்கள் பிரச்சினை - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, 22 ஜூன் (ஹி.ச)

பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதனையடுத்து, பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தெருநாய்கள் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தெருநாய்கள் நடமாட்டம் குறித்த விரிவான விசாரணையை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

அதற்குள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் இணைந்து உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b