காந்தர்பால் மாதா கீர் பவானி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
ஜம்மு காஷ்மீர், 22 ஜூன் (ஹி.ச.) ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிதர்கள், இன்று காந்தர்பால் மாவட்டம் துள்முல்லாவில் உள்ள மாதா கீர் பவானி கோயிலில் நடைபெற்ற ஆண்டு மேளாவில் கலந்து கொண்டனர். கோ
Thousands of devotees offer prayers at the Mata Kheer Bhavani Temple in Ganderbal


ஜம்மு காஷ்மீர், 22 ஜூன் (ஹி.ச.)

ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிதர்கள், இன்று காந்தர்பால் மாவட்டம் துள்முல்லாவில் உள்ள மாதா கீர் பவானி கோயிலில் நடைபெற்ற ஆண்டு மேளாவில் கலந்து கொண்டனர்.

கோயிலின் மூல தெய்வமான ராக்னியா தேவியை வழிபட்டு ஆசி பெறுவதற்காக பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே திரண்டனர். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மதத் திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வந்திருந்தனர்.

பக்தர்கள் பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டு, புனித ஊற்றில் பால் மற்றும் கீர் (பாயசம்) சமர்ப்பித்து, அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து சமூகங்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்ததால் ஆன்மிக எழுச்சியுடன் கோயில் வளாகம் காணப்பட்டது.

யாத்ரீகர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக நாள் முழுவதும் பாதுகாப்புப் படையினர், சுகாதார சேவையாளர்கள், போக்குவரத்து வசதிகள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இப்புனிதப் பயணத்தை ஒழுங்கமைப்பதில் காஷ்மீரி முஸ்லிம்கள் காஷ்மீரி பண்டிதர்களுடன் இணைந்து செயல்பட்டது, அப்பகுதியின் நீண்டகால வகுப்பு நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ மரபை பிரதிபலித்தது.

தங்கள் கலாச்சார மற்றும் ஆன்மிக வேர்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக பல பக்தர்கள் தெரிவித்தனர். இந்த ஒன்றுகூடல், தங்கள் பிணைப்பை வலுப்படுத்தும் உணர்ச்சிபூர்வமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காஷ்மீரி பண்டித சமூகத்தின் முக்கிய மத நிகழ்வான கீர் பவானி மேளா, ஆண்டுதோறும் நாடு முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது.

காஷ்மீரில் நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் சகவாழ்வுக்கு தங்கள் முஸ்லிம் அண்டை வீட்டாரின் ஆதரவே சான்று என காஷ்மீரி பண்டிதர்கள் தெரிவித்தனர்.

பாரம்பரியமாக ஜ்யேஷ்ட அஷ்டமி என்ற புனித நாளில் நடைபெறும் இந்த மேளா, ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கோயில் வளாகத்தில் உள்ள புனித ஊற்றில் பக்தர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்து, மாதா கீர் பவானியின் ஆசியை வேண்டுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b