அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவ
Thirumavalavan Press Meet


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 தொழிலாளர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் திருமாவளவன் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களை பணிபுரியும் தொழிற்சாலைகளிலேயே தங்க வைப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடாது என்ற கவலையையும் வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ