Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 ஜூன் (ஹி.ச.)
சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக காங்கிரஸ் கட்சி கிரேட் நிக்கோபார் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதே நேரம், இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து சுற்றுச்சூழல் அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் 14.2 மில்லியன் TEU கொள்ளளவு கொண்ட சர்வதேச கொள்கலன் பெயர்வு முனையம், மணிக்கு 4000 பயணிகளை கையாளும் திறன் கொண்ட கிரீன்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம், 450 MVA எரிவாயு மற்றும் சூரிய சக்தி அடிப்படையிலான மின் நிலையம், மற்றும் 16,610 ஹெக்டேர் பரப்பளவில் புதிய நகரியம் ஆகியவை அடங்கும். இது மூன்று கட்டங்களாக 2047-க்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், கிரேட் நிக்கோபார் திட்டத்தின் ஒரு பகுதியாக கலத்தியா விரிகுடாவில் அமையவுள்ள சர்வதேச கொள்கலன் பெயர்வு துறைமுகத்திற்கான தனியார் பங்கு மற்றும் ஏலப் போட்டி குறித்த முழு விவரங்களையும் வெளியிடுமாறு கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் கிரேட் நிக்கோபார் திட்டத்தின் ஒரு பகுதியாக கலத்தியா விரிகுடாவில் அமையவுள்ள சர்வதேச கொள்கலன் பெயர்வு துறைமுகத்தை மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பெயர்வு துறைமுக கட்டுமானத்திற்கு 100 சதவீத தனியார் பங்கு அனுமதிக்கப்படுமா? துறைமுகங்களின் உரிமை பல நிறுவனங்களிடம் பகிர்ந்தளிக்கப்படுமா?
இத்திட்டத்தின் சிறப்பு நோக்க வாகனத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத பங்குகள் இந்தியாவுக்கு சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திடம் இருக்க வேண்டும்.
வருங்கால ஏலதாரர்களுக்கான தகுதி விதிமுறைகளை நிர்ணயிக்கும்போது போதுமான போட்டி உறுதி செய்யப்பட வேண்டும்.
இதனடிப்படையில், குறைந்தபட்ச தனியார் பங்கு 55 சதவீதம் என்றால் 100 சதவீத தனியார் பங்கு அனுமதிக்கப்படுமா, அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கும் குறைந்தபட்ச பங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், துறைமுகங்களின் தனியார் உரிமை பலதரப்பட்டதாக இருக்குமா அல்லது இதுவரை விற்கப்பட்ட ஆறு விமான நிலையங்களையும் ஒரே தனியார் நிறுவனம் கையகப்படுத்தியதைப் போன்ற நிலை இங்கும் உருவாக அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுகிறது.
PPPAC குழு அமைச்சகத்தின் வயபிலிட்டி கேப் ஃபண்டிங் மானியக் கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், அமைச்சகம் தனது ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் இருந்து VGF அல்லது மூலதன மானிய ஆதரவை வழங்குமா என்று கூற வேண்டும்.
தனியார் பங்கேற்பை அழைப்பதற்கான டெண்டர் வெளியிடும் கால அட்டவணை மற்றும் தனியார் இணை உரிமையாளர் மற்றும் இயக்குநரின் இறுதித் தேர்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b