மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 1,432 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் ஜூன் 26-ம் தேதி (மொஹரம் பண்டிகை), 27-ம் தேதி (சனிக்கிழமை), 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 25, 26, 27 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அதிகமான பயணிகள்
1,432 special buses to be operated


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் ஜூன் 26-ம் தேதி (மொஹரம் பண்டிகை), 27-ம் தேதி (சனிக்கிழமை), 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 25, 26, 27 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25-ம் தேதி (வியாழக்கிழமை) 525 பேருந்துகளும், 26 மற்றும் 27-ம் தேதிகளில் தலா 315 பேருந்துகளும் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை 85 பேருந்துகளும், 26 மற்றும் 27-ம் தேதிகளில் தலா 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து 25 முதல் 27-ம் தேதி வரை தலா 14 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 615 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b