தமிழக அரசு கல்லூரிகளில் 57% மாணவர் சேர்க்கை நிறைவு - உயர்கல்வித்துறை தகவல்
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில
தமிழக அரசு கல்லூரிகளில் 57% மாணவர் சேர்க்கை நிறைவு - உயர்கல்வித்துறை தகவல்


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் நிலையில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பதிவு மே 7ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஜூன் 2ஆம் தேதி தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டன.

ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வாரியாக ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 57 சதவீதத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 1,26,959 இடங்கள் இக்கல்லூரிகளில் உள்ள நிலையில், இதுவரை 71,502 இடங்கள் நிரம்பியுள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, எஞ்சிய இடங்களுக்கான சேர்க்கை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஜூலை 1ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், முதுகலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையும் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 3,539 மாணவர்கள் விண்ணப்பித்து பதிவு செய்துள்ளனர்.

இளங்கலை சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடையும் நிலையில், முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மாணவர்களின் ஆர்வம் காரணமாக வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b