கம்பம் அம்மா உணவகத்தில் தோசை நிறுத்தம் -அதிகாரிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தினர் வாக்குவாதம்
தேனி, 23 ஜூன் (ஹி.ச.) தேனி மாவட்டம் கம்பம் அம்மா உணவகத்தில் தோசை வழங்குவதை திடீரென நிறுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்பம் அம்மா உணவகத்தில் கொரோனா கா
அம்மா உணவகம்


தேனி, 23 ஜூன் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கம்பம் அம்மா உணவகத்தில் தோசை வழங்குவதை திடீரென நிறுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கம்பம் அம்மா உணவகத்தில் கொரோனா காலத்திற்குப் பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு தோசை வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென தோசை நிறுத்தப்பட்டு அதன் பதிலாக பொங்கல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அம்மா உணவகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

நேற்று வரை வழங்கப்பட்ட தோசை இன்று ஏன் வழங்கப்படவில்லை? எங்களுக்கு இப்போதே தோசை வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நகராட்சி ஆணையருடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரியை அம்மா உணவகத்துக்குள் அழைத்துச் சென்று நிலைமையை விளக்குமாறு கோரினர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில், அம்மா உணவகத்தின் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியலில் தோசை இடம்பெறாததால் தற்போது வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தோசை வழங்கப்பட்டு வந்ததாகவும், அதற்கான உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்ததாகவும் தொண்டர்கள் வாதிட்டனர்.

மேலும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அம்மா உணவகத்தில் தோசை சாப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகே தோசை நிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய தமிழக வெற்றிக் கழகத்தினர், அரசியல் காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அம்மா உணவகத்திற்கு வந்த சில பெண்கள், நேற்று வரை தோசை வழங்கப்பட்டது.

இன்று திடீரென பொங்கல் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பலரும் தோசையையே விரும்புகின்றனர். அரசு மீண்டும் தோசை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், பல ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களும், தொடர்ந்து தோசை சுட்டு வழங்கி வந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, அம்மா உணவகங்களில் தோசை வழங்கும் நடைமுறையை தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P